குலுமணாலியில் சிக்கிய நடிகர் கார்த்தி 5 மணிநேரம் காரில் தவிப்பு !
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் தேவ் படப்பிடிப்பு குலுமணாலி பகுதியில் நடந்தது.
இதற்காக படக்குழுவினர் 140 பேர் அங்கு சென்று இருந்தனர். கார்த்தியும் குலுமணாலி புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் அங்கு திடீரென்று கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டனர்.
நடிகர் கார்த்தியும் நிலச்சரிவில் சிக்கி காருக்குள்ளேயே பல மணிநேரம் தவித்தார்.
தற்போது அங்குள்ள கிராமத்தில் அவர் தங்கி இருக்கிறார். கார்த்தியை தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது:–
‘தேவ்’ படத்தின் காட்சிகளை குலுமணாலி யில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம் பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.
ஆனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கார், பஸ் மற்றும் ஸ்கூட்டர்கள் அடித்து செல்லப் பட்டன.
நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது.
இந்த பதற்றமான சூழ்நிலையை பார்த்த போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது.
இதனால் படப்பிடிப்புக்கு நான் காரில் சென்ற போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரோட்டில் சென்ற கார்கள் நகரவே இல்லை. 4, 5 மணி நேரம் நான் காரிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கி யிருக்கிறேன்.
ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேர் எங்கே தங்குவார்கள், சாப்பிடுவார்கள், எப்படி கீழே இறங்குவார்கள்? என்று நினைத்தால் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு கார்த்தி கூறினார்.
இந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



No comments